History
சங்கத்தின் பயணப்பாதையில்
நமது கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கமானது பிற மாவட்டங்களில் வாழ்கின்ற குமரி மாவட்ட வெள்ளாளர் பெருங்குடி மக்களின் பொருளாதார கலாச்சார, கல்வி மேம்பாட்டிற்கென ஓர் அமைப்பு வேண்டுமென்பது நமது சமுதாய மக்களின் நெடு நாளைய நோக்கம். 1976 டிசம்பர் 12ம் தேதி ‘நாஞ்சில் வெள்ளாளர் சங்கம்” தொடங்கப்பட்டபோது அந்த எண்ணம் நிறைவேறியது. இதன் முதல் தலைவராக டாக்டர் கே.எம்.பிள்ளை, செயலாளராக திரு.எம்.சுவாமிநாத பிள்ளை என்ற காந்தி பொருளாளராக திரு.பி.சி.பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் ‘நாஞ்சில் வெள்ளாளர் சங்கம்” என்ற பெயரினை ‘கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கம்” என்று மாற்ற வேண்டும் என்று முதல் பொதுக்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் கொண்டுவந்த பரிந்துரையை பொதுக்குழு ஏற்றுக்கொண்டது.
அன்று முதல் ‘கன்னியாகுமரி வெள்ளாளர் அசோசியேசன்” என பெயர் மாற்றப்பட்டது. 1977-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடந்த பேரவைக் கூட்டத்தில் முன்னாள் நீதிபதி எம்.குமாரசுவாமி பிள்ளை தலைவராகவும், செயலாளராக திரு.பி.சி.பிள்ளை மற்றும் துணைத்தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் பதிவானது 1977-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ம் தேதி 152/1977 எண்ணில் பதிவு செய்யப்பட்டது.
சங்கத்தில் சொந்த இடம் வேண்டும் என 1977-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவு எடுத்து திரு.ஆர்.பி.பிள்ளை தலைமையில் முடிவு எடுக்கப்பட்டது. இதில் பொருளாளராக திரு.ஏ.சிதம்பரம் பிள்ளையும் மற்றும் திரு.இ.பொன்னப்ப பிள்ளை, திரு.எம்.எஸ்.எஸ்.மணி, திரு.கே.மனோகரன் ஆகியோர் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
குழுவின் முயற்சியில் அரும்பாக்கம் சங்கக் கட்டிடம் கட்டுவதற்கு மனை வாங்கப்பட்டது. மனை வாங்க செயற்குழு உறுப்பினர் திரு.பி.சாஸ்தாங் குட்டி பிள்ளை உதவியாக இருந்தார். சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா 1979-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ம் நாள் நடைபெற்றது.
இதற்கு தேவையான பணத்திற்கு பல கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து அதன்மூலம் கிடைத்த தொகையையும், நமது சமுதாய பிரமுகர்கள் பலர் நன்கொடை வழங்கியும் கை கொடுத்தனர். திரு.எஸ்.நடராஜ் பிள்ளை (M/s. Mas Exports, Madras-5) அருணா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் திரு.ஏ.ஆறுமுகம் பிள்ளை, ஆட்டோபார்ட்ஸ் கம்பெனி உரிமையாளர் திரு.ஏ.ராகவன், திரு.சி.எஸ்.பிள்ளை முதலியோர் குறிப்பிடத்தக்கவர்.
புத்தேரி எஸ்.ராமஸ்வாமி (ஆர்.கே.எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர்) கட்டிடத்திற்கு தேவையான மின் இணைப்பும் மின்சார உபகரணங்கள் அனைத்தும் அன்பளிப்பாக கொடுத்து உதவினார். சங்கக் கட்டிடத்தின் திறப்பு விழா 1987-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் நாள் நடைபெற்றது.
ஒரு புறம் சங்க கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தாலும் இன்னொரு புறம் சமுதாய மேம்பாட்டிற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நமது இனத்தினை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய ஆதாரங்களைத் திரட்டி 1976-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தெதி தமிழக முதல்வர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மீண்டும் அடுத்து வந்த தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களிடமும் நமது கோரிக்கை அடங்கிய மனு கொடுக்கப்பட்டது.
மேலும் வேளாளர் கூட்ட அமைப்பின் தலைவர் திரு.எஸ்.காசி விஸ்வநாதன் மூலமும் மனு அளிக்கப்பட்டு அம்பாசங்கர் கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நம் இன மக்களின் முகவரி அடங்கிய உறுப்பினர்களின் கையேடு 1990-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் நாள் வெளியிடப்பட்டது. நமது நிர்வாகிகளுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பில் நீதிமன்றம் சென்றதால் 12 வருட காலம் செயல்பாடுகள் இன்றி சங்கப்பணிகள் தொய்வு அடைந்தது. நமது இனத்தை பிற்பட்டோர் பட்டியலில் இணைக்க அரசு ஆய்வுக்குழு அனுப்பியது. இருப்பினும், நமது சொந்தங்களில் சிலர் இதனை விரும்பாததால் முயற்சி வெற்றி பெறாமல் உள்ளது.
இருப்பினும் தற்பொழுது 2016-ல் நமது இனத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. 1977 முதல் நமது சமுதாயத்தை சார்ந்த பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி கௌரவித்து வருகின்ற அரும்பணியினை தொடர்ந்து செய்து வருகிறது. நம் இனத்தில் பிறந்து நம் தேசத்திற்காக உழைத்த தியாகச் செம்மல்களான ஜெய் ஹிந்த் செண்பக ராமன் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ப.ஜீவானந்தம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்ற பெரியோர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களைக் கொண்டாடி வருகிறோம்.
2008 முதல் திரு.P.சாஸ்தாங்குட்டி பிள்ளை அவர்களின் தலைமையில் புதிய நிர்வாகக்;குழு பொறுப்பேற்றது. 2010 முதல் சங்கக் கட்டிடமானது புதுப்பிக்கப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
2017 முதல் திரு.யு.அய்யப்பன் அவர்களின் தலைமையில் புதிய நிர்வாகிகள் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நமது நாஞ்சில் வெள்ளாளர் சொந்தங்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் புதிய கட்டிடம் அமைக்க தீர்மானிக்கப்பட்டு இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் வாழும் கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்ளின் முகவரி அடங்கிய கையேடு தயாராகி வருகிறது.
சென்னை அரும்பாக்கம் கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கத்தின் கிளைகள் அம்பத்தூர், திருவொற்றியூர், மடிப்பாக்கம், போரூர், மறைமலைநகர் மற்றும் அண்ணாநகர் போன்ற இடங்களில் சீரும் சிறப்புமாக இயங்கி வருகிறது.
சங்க செயல்பாடுகள், தகவல்கள் அனைவருக்கும் சென்றடையும் வகையில் Nanjil Nattu Vellalar போன்ற Whatsapp Group மற்றும் Nanjil Vellalar என்ற Face book கணக்கும், Email: nanjilnattuvellalar@gmail.com-ம், www.nanjilnattuvellalar.com என்ற இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
நம் இந்திய திருநாட்டிற்காகவும், இந்திய மக்களுக்காகவும் தியாகங்கள் பல செய்தும் ஜாதி மதம் மொழி என்று பாராமல் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று வாழ்ந்து காட்டிய பெரியோர்கள் பிறந்ததை எண்ணி பெருமை கொள்வோம். ஒன்றுபட்டு உழைப்போம், உயர்வடைவோம்.